Monday, 27 July 2015

 

பயணங்கள் : பாலி ( Bali)

 பகுதி 1

 


                              என் கனவுப் பிரதேசங்களில் முக்கியமான சுற்றுலாத் தளம். சிறு வயதில் பாடப் புத்தகங்களில் சித்தார்த்தனின்(சமஸ்கிருதத்திற்கு எதிராகவும், உருவ  வழிபாட்டை தவிர்த்த கௌதம புத்தன் ) மொழி பாலி என்று பனி மூடமாக என் மனதில். அதே பெயரில் ஒரு தீவு பற்றி படித்த வயதில் புத்தனையும் பாலி மொழி பற்றி படித்ததும் மறந்தது என் தவறா?அல்லது எனக்கு அளிக்கப்பட்ட கல்வி முறையா? என்று தெரியாது. வழக்கம் போல் என் கோகைன் மூலமாகத் தான் ( என்னருமை டிஸ்கவரி சேனல் தான்) பாலியும் எனக்கு கனவுப் பிரதேசமாக மனதில் விதைத்தது. ரெண்டு வயதே நிரம்பிய என மகனிடம் "கொமோடோ எப்படி பா நடக்கும்?" என்றால் 20 முறை சளைக்காமல் நடந்து காட்டுவான். அப்போதெல்லாம் வாழ்நாளில்  என்றேனும் ஒரு நாள் நேரில் இந்தோனேசியாவை, பாலித் தீவை பார்த்து விடுவோமா ? என்று நினைத்த கனவு நடந்தே தீரும் என்று நினைக்கவே இல்லை.



                                 இந்தோனேசியா வந்ததிலிருந்து ஒரே முடிவில் உறுதியோடு இருந்தேன்...நல்ல கேமரா இல்லாமல் பாலி செல்வதில்லை என்று.  ஆசையே துன்பத்திற்குக் காரணம். என் ஆசைக்கு துன்பம் வலிமையாக அடி கொடுத்தது. நல்ல காமெராவும் இல்லை, திடீர் முடிவினால் பெரிதாக உள்ளக் கிளர்ச்சி இல்லாமல் திட்டமிடல் நடந்தது. ரம்ஜான் விடுமுறைக்கு நம் நாட்டுக்குப் போவதா? பாலித் தீவுக்குப் போவதா? என்ற குழப்பம்.  மனம்  பாலிக்கு செல்ல முடிவெடுக்க  வைத்தது.   மத்திய ஜாவாவிலிருந்து பாலிக்கு சாலை வழி 13 மணி நேரம் மற்றும் ஒரு மணி நேரக் கடல்  வழிப் பயணம். நான்கு  கார்கள். இரண்டு கார்கள் தலை நகர் ஜகர்தாவிலிருந்து, இரண்டு செமரங்கிலிருந்து இணைந்து கொள்வது என்று திட்டம். ...நிற்க 

                                    

                                செமரங் - எங்கள் ஊரில்   ஒரு சிவன் கோவில் உள்ளது என்று உடன் வேலை செய்யும் நண்பன்  சொன்னதால், ஒரு நாள் நானும் நண்பன் சம்பந்தமும் வழிபட சென்ற பொது தான் முதல் முறை  பாலி  இந்து  கோவிலைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. ஞாயிற்றுக் கிழமை முன் மாலை நேரத்தில்  யார் வருவார்கள் கோவிலுக்கு? இருவரும் உள்ளே சென்றோம்..நால்வரைத் தேடினோம் , நவக்கிரகங்களைத் தேடினோம், பிள்ளையாரைத் தேடினோம், சிவனைத் தேடினோம்....ஹ்ம்ம்..கண்ணில் பட்டால் தானே? ஒரு விக்ரகத்தையும் காணோம். சிவன் கோவில் என்று சொன்னானே? ஒன்றுமே இல்லையே? பாலி இந்துக் கோவில் மாதிரி கட்டிட அமைப்பு இருந்ததால் ஒரு வேலை இங்கு இந்துக்கள் மிக மிகக் குறைவு என்பதால் எதுவுமில்லை என்று நினைத்துக் கொண்டோம். கோவிலின் மத்தியில் ஒரு உயர்ந்த சிற்பம் ஒன்று இருந்ததைப் பார்த்து அதை வணங்கி விட்டு அங்கேயே உட்கார்ந்து கொண்டோம்.  சில நிமிடங்களில் ஒரு இளம் தம்பதியர் நெற்றியில் பச்சரிசி பொட்டோடு உள்ளே வந்தனர்.

 

 

                                கோவிலுக்கு வெளியே கை கால்கள் சுத்தம் செய்து கொண்டு உள்ளே வந்து நேராக ஊதுபத்தி இரண்டை எடுத்து பற்ற வைத்து அந்த நடுவிலிருக்கும் சிற்பத்தின் முன்னால்  போய் வஜ்ராசனத்தில் அமர்ந்தனர் இருவரும். ஒரு  முறை நெஞ்சுக்கு எதிரே கரம் குவித்து, பின்னர் தலைக்கு மேலே கரம் குவித்து தொழ ஆரம்பித்தனர். என்ன மந்திரங்கள் உச்சாடனம் செய்தனர் என்பது  எங்களுக்குத் தெரியவில்லை.  உதடுகள் மட்டும் முனுமுனுத்தவாறே இருந்தது. எந்த அசைவும் இல்லாமல் அவ்வப்போது கரங்கள் மட்டும் ரோபோவைப் போல் தலைக்கு மேல்  செல்வதும்,கரம் குவிப்பதும் என்று கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் தொழுகை நடந்தது. ஒரு வினாடி கூட கண்கள் திறக்கவில்லை.  ஒப்பிட்டுப் பார்த்தேன்.....நம்மவர்கள் பாதிப்பேர்  கும்பிடும் லட்சனம் தான் தெரியுமே..?நான் உட்பட.



                             

                                  அவர்கள் தொழுது விட்டு வந்ததும்...இங்கே சாமி விக்ரகமே இல்லையே? அந்த நடுவிலிருக்கும் சிற்பம் என்ன என்று கேட்டதற்கு அது தான் சிவலிங்கம் என்று சொன்னதும் ஆச்சரியமாக இருந்தது. பேசாமல் நம் நாட்டிலும் இதைப் போன்ற சிற்பம் இருந்தால் நன்றாக இருக்குமேயென்று ஒரு கணம் யோசித்தேன். லிங்கம் என்றாலே ஆன் பெண் உறுப்புக்களைத் தான் கும்பிடுகிறோமென்று பகுத்தறிவுப் பன்னாடைகளின் வக்கிரம் பிடித்தக் கண்களுக்கு(மூளைக்கு) இந்த சிற்பம் அந்த எண்ணத்தை மாற்றி விடுமென்று தான்.சென்ற வருடம் சக ஊழியன் ஒருவன் பாலியிலிருந்து மரத்தினாலான "அந்த" பொருளை பாட்டில் ஓப்பனர் பரிசாக கொடுத்து அதிர்ச்சி கொடுத்ததும் அதனால் சிறிய  களேபரம் அரங்கேறியதும் இன்னமும் மறக்கவில்லை. அந்த இளைஞனுக்கு  தேசிய மொழியும் சுமாராகவே தெரிந்ததால் எங்களுக்கு மேலும் விவரங்கள் கேட்டறிய முடியவில்லை........நிற்க

 
 
 
 

                                  கிட்டத்தட்ட 20மணி நேரப் பயணத்தை நினைத்தாலே பயமாயிருக்கும்(பயணத்தின் இடையிடையில் இளைப்பாறுதல், உணவருந்துதல், இன்னபிற சைத்தோபசாரங்கள்  சேர்த்து ). ஆனால் அத்தனை நேரமும் கடலோரக் சாலை வழிப் பயணமாக  இருந்தால்?!!!

 

                                                                                                                          தொடரும் .....

 



2 comments: