Friday, 19 June 2015

 ஒப்பாரி 1


தினையும் சோளமும் போச்சு

 சோறென்னும் அரிசி வந்துச்சு

 அரிசி போய், கோதுமையும் போய்
 
மைதா வந்து அடியில மூலமாச்சு
 
 
நாவல் பழமும், நெல்லியும் போச்சு

 ஆப்பிளும் ஆரஞ்சும் வந்துச்சு
 
மிளகும், இஞ்சியும் மருந்தாகி போச்சு

 மிளகாய் வந்து வயித்த பொத்தலாக்கிச்சு
 
 
வெல்லம் வேண்டாம்

 வெள்ளை சர்க்கரை வேணுமின்னு சொன்னோம்

 சர்க்கரை வியாதியும் வந்துச்சு
 
 
கல் உப்பு போச்சுது  சால்ட் உப்பு வந்துச்சு

 கூடவே இலவசமா  தைராய்டும்,  ரத்தக் கொதிப்பும்....
 
 
சாப்பிடுறப்ப தண்ணி வேண்டா

 கோக் தான் மேன்மக்கள் பழக்கம்..
 
அறுசுவை உணவு வேண்டாம்

 அரை வேக்காட்டுப் பீட்ஸா போதும்
 
 
வேப்பங்குச்சி கசப்பாயிருக்கு

சீமை டூத் பேஸ்ட் சுவையா இருக்கு
 
 
பயறு பொடி எதுக்கு?  சோப் இருக்க

 மஞ்சள் எதுக்கு? Crack இருக்கே
 
முக்கனி என்னாத்துக்கு? புரூட் சாலெட் மேல்
 
 
கொள்ளு கொலஸ்ட்ரால குறைக்குமா?

ஓட்ஸ் கஞ்சி தானெ எங்க மருந்து
 
நீராகாரமும் தேவையில்ல
 
 
 இடியாப்பம் வேண்டான்னு சொன்னோம்

நூடுல்ஸ் பேய்  இப்ப ஆப்படிக்குது
 
 
பனைமரக் கள்ளு  போச்சு

 சீமை சரக்கு  எங்க ஈரல கரைச்சிச்சு
 
 
எங்கள் மொழி பேசுறது வேப்பங்காய்

மத்த மொழி எல்லாம் தேவ மொழிக
 
 
அட சாமியே எங்களுக்கு சீமையிலிருந்து தான!
 
எங்க முப்பாட்டன் தான் சிங்கத்திருளன், சுடலை மாடன்,
எல்லைச் சாமிக  மட்டும் தான்..
 
எங்கள் ஊரு அம்மன்கள் எங்க பாட்டிக தானே?

அதனால அவங்கயெல்லாம் சின்னக் சாமிக.

 எவனோ முப்பாட்டனுக தான் பெரிய சாமி...
 
 
நாகரீகம்  நாதாரித்தனமா  போச்சே!
 
எங்க தனித்துவம்  என்னன்னே தெரியலியே?
 
மக்கா...
உன்னால நான் கெட்டேன்  என்னால நீ கெட்ட
 
நீயும் நானும் அடிச்சுகிட்டு சாகுறோமே?
 
ஆள் வச்சு கூட  ஒப்பாரி வைக்க
முடியாம போச்சே?!

Saturday, 13 June 2015

கூண்டுப் பறவைகளும் வல்லூறும் 

 

                                            எங்களூரில் மேற்குக் கோடியில்  சில காலம் குடியிருக்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்த போது, பறவைகள் வளர்க்கலாமென என் மகன் கேட்டான். சரிதான் வளர்க்கலாமே என்று முடிவெடுத்த நேரம் பார்த்து சாலைகளில் ஆப்பிரிக்க பறவைகள் விற்றுக் கொண்டிருந்தார்கள். முதலில் நான்குப் பறவைகள் வாங்கினோம். இரு நாட்கள் கழித்து கூண்டு சிறிதாக இருந்ததால் பெரிய கூண்டு ஒன்று வாங்கலாமென நினைத்த போது, தினகரன் சித்தப்பா " நாமளே பொருட்கள் வாங்கி செஞ்சுரலாம் டா மகனே" என்றார்.  நாமே கூண்டு செய்வதா? என்று தயங்கினாலும் முயற்சி செய்யலாமென தேவையான பொருட்கள்   வாங்கி கூண்டு செய்ய ஆரம்பித்தோம். முழுதாக முடிக்க இரண்டு நாட்களாயிற்று. என் மாமனாரும் சித்தப்பாவும்  எலக்ட்ரீசியன்ஸ். ஆனால் எளிதில் உடல் வளையாத எனக்கு கை கால் வலி தாங்க முடியவில்லை. ( Spondilitis தொல்லையினால் ) . என் மனைவி தினமும்   கூண்டை சுத்தம் செய்து நீர் வைத்து, பராமரிப்பு வேலை  செய்து வந்தாலும் அவ்வப்போது ஊரிலு இருக்கும் நாட்களில் நானும் உதவி செய்வேன்.

   

                                          நீர் நிலைக்கு அருகில்( அட நம்ம கொண்டனேரி கன்மாய்! ) மாடி வீட்டிலிருப்பதால் வெயிலும், குளிரும் அதிகமாகவே இருக்கும். எந்த நேரமும் பறவைகள் சத்தம், தூரத்தில் தெரியும் வயல் வெளிகளும், மேற்குத் தொடர்ச்சி மலைகளும் இயற்கைக்கு அருகில் வசிக்கும் மாயயைத் தந்து கொண்டிருக்கும்.  கூண்டு பெரிதாக செய்து மேலும் சில பறவைகள் வாங்கி உள்ளே அடைத்தாயிற்று ..மொத்தம் 12 பறவைகள்( மீன்கள், பறவைகள் எதுவுமே எனக்கு வீட்டில் வளர்க்கப் பிடிக்காது ...சிறைப் பிடித்தல் போன்றது தான். ஆனால் மகனுக்காக ஒரே ஒரு தடவை பிடிவாதத்தை விட்டு கொடுக்க நினைத்ததின் விளைவு) .  மொட்டை மாடியில் அவ்வப்போது பறவைகள் வந்து இளைப்பாறி விட்டுப் போனாலும் எங்கள் வீட்டின் தின விருந்தாளிகள் எப்பொழுதும் சிட்டுக் குருவிகள் தாம். கீழே சிதறியிருக்கும் தினையை உண்பதற்காக வந்தவை, தினமும் அதிகாலையிலேயே வந்து காத்த ஆரம்பித்து விட்டன. பறவைகள் நாங்கள் நேரம் தவருவதை சுட்டத் தவறவில்லை. முதல் வாரத்திலேயே எங்களுடன் அவைகள் தொடர்பு கொண்டதை சில நாட்கள் கழித்தே நாங்கள் உணர ஆரம்பித்தோம்.  இரவு வேளைகளில் நீர் அல்லது உணவு வேண்டுமென்றால் ஒரு சத்தம், சிறியப் பறவையினங்களை தின்னும் பெரிய வகை பறவைகள் வானில் கடந்து சென்றால் ஒரு சத்தம், காகங்கள் அருகில் பறந்து வந்தால் சிறகை படபடவென் அடித்துக் கொள்ளுதல் என்று பலவற்றை நாங்கள் உன்னித்து கவனித்து, தொடர்பைப் புரிந்து கொண்டோம் என அவைகளுக்கும் புரிய வைத்தோம்....கூண்டை பாதி துணியால் சுற்றி,.வெயில் நேரத்தில் ஈரத்துணியால் மூடி வைத்து, இரவில் முக்கால் வாசிப் பகுதி மூடி பாதுகாப்பாக வைத்து அவைகளுடன் நெருக்கத்துடன் நட்பு வளர்த்தோம்.

                                           ஒரு நாள் காலையில் கோவிலுக்கு போகலாமென்று அவசர அவசரமாக கூண்டை சுத்தம் செய்து, நீர் வைத்து, தினையும் வைத்து....கிளம்பி சென்று விட்டோம். கூண்டில் துனியை சுற்ற மட்டும் மறந்து.....வழிபாடு முடிந்து திரும்பி வந்து வீட்டுக்கருகே வந்த போது கர்ணக் கொடூரமாக பறவைகள் சத்தம் கேட்டது. ஆக்ரோஷாமாக,அலறலாக விபரீதமாக கூச்சல் சத்தம் கேட்டதும் என்னாயிற்று என்று வேகமாக இரண்டிரண்டு படிகளாகத் தாண்டி ஓடினேன் மாடிக்கு.  கூண்டின் மேல் ஒரு வல்லூறு சிறகடித்தபடி பறவைகளை கொத்த முயன்று கொண்டிருந்தது. உடனே கீழே கிடந்த கரண்டியை எடுத்து வீசினேன்..ஆனால் பறந்தோடி விட்டது வல்லூறு. அருகில் சென்று பார்த்ததும் அந்த கொடுமையை பார்க்க...என் மனதில் வேதனை தாளவில்லை. இரும்பினால் செய்த கூண்டினுள் எளிதில் புக முடியாதெனினும் உள்ளேயிருக்கும் பறவைகள் வல்லூறு தன்னைத் தான் கொத்தி விடுமென்று மாறி மாறி ஒன்றுக்கொன்று கொத்திக் கொண்டு ரத்தக் களறியாக மாறியிருந்தன.  அவற்றால் ரணத்தினால் நிற்க கூட முடியவில்லை. என்னால் மருந்திடவும் முடியாத அளவிற்கு பலவீனமாகி விட்டிருந்தன. வேறு வழியில்லாமல் நீரை மெல்ல தூற்றி, செய்த தவறை நினைத்து என்னை நொந்து கொண்டு துணியை சுற்றி வைத்தேன்.

  
                                         
 

                                           காயங்கள் எல்லாம் ஆறிய  பின்  சில வாரங்கள் கழித்து   என் மகனிடம் மெல்ல

 " சஞ்சீவ்....நம்மள யாராவது கூண்டுல போட்டு அடைச்சு வைத்தா எப்படியிருக்கும்? பறவைகள் பறக்கவே முடியாம கூண்டுக்குள்ள இருந்தா சிறகுகள் வேலை செய்யாதில்ல? நாம இல்லாதப்ப பறவைகள கழுகு, காகம் எல்லாம் வந்து தொந்திரவு குடுக்குது...பேசாம வெளிய விட்டுருவோமா?" என்றேன்.

 

 என்ன நினைத்தானோ தெரியவில்லை...உடனே " நாம தினமும் சாப்பாடு போடுறோம். இந்தப் பறவைகள் என்னை மாதிரி குட்டிப் பாப்பாவா தானே இருக்கு? கொஞ்சம் வளர்ந்ததும் அனுப்பிடலாமா?" என்றான்.

 

 " இந்த பறவைகள் எல்லாம் ஹம்மிங் பறவைகள் மாதிரி அளவுல சிறியதா இருந்தாலும் எல்லாமே பெரிய பறவைகள் தான்" என்று சொல்லி ஒரு வாரம் கழித்து  ஒரு மாலை வேளை கூண்டைத் திறந்து விட சொன்னேன்.

 

                                       பணம் கொடுத்து பறவைகள் வாங்கி அவைகளை கூண்டிலிருந்து திறக்க வைத்தால் எந்த குழந்தைக்கு தான் மகிழ்ச்சியிராது?   கூண்டைத் திறந்தாலும் ஒவ்வொன்றாக தயங்கிக் கொண்டே பறந்தோடின...ஒன்றைத் தவிர. எங்கள்  வீட்டைச்  சுற்றி கொஞ்ச நேரம் பறந்து விட்டு வேறு வழியில்லாமல் அதுவும் பறந்து விட்டது. எங்களுக்கு லேசான வருத்தம் கலந்த மகிழ்ச்சி.