Saturday 23 May 2015

பயணங்கள் : ஜும்ப்ளாங் குகை என்ற பூமியின் வயிறு

                             உலகில் மிகப் பிரசித்தி பெற்ற சில குகைகளைப் பற்றி நான் படித்ததும், டிஸ்கவரி சேனலில் பார்த்ததும் உண்டு. உயரம் என்றாலே மரண பயம் கொள்ளும் எனக்கு இருட்டைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. பதின் வயதுகளில் என் நண்பன் ஹரி செங்குத்து ராட்டினத்தில் ஏறலாம் என்ற போது எத்தனை நாள் தான் பயந்து கொண்டே இருப்பது? ஒரு முறை பரீட்சித்து பார்க்கலாம் என்று முயற்சித்தேன். ஹ்ம்ம்...... நமக்கு என்ன முடியுமோ அதை மட்டுமே செய்வது உத்தமம். அன்று ஏற்பட்ட மரண பயம் நிரந்தரமாகி விட்டது. சிறு வயதில் முன் அறையிலிருந்து சமயலறைக்கு போக பயந்தவன்.  பயப்படுவதற்கு என்றுமே பயந்ததில்லை. 10 வயதில் என் தந்தை, குற்றாலத்தில் செண்பகா தேவி அருவிக்கு அருகே ஒரு குகைக்குள்ளே அழைத்து சென்ற போது பயந்த நினைவு இல்லை.  வளர வளர பயம் என்னை தொற்றிக் கொண்டது. பின்னாளில் "நான்  ஒரு இரவு தனியாக தங்கியிருக்கிறேன்" என்று அப்பா சொன்ன போது கற்பனை செய்தே பயந்தேன். அடர்ந்த வனத்தில், தனியாக குகையில் ...??? கோடி ரூபாய்  கொடுத்தாலும் என்னால் முடியாது.

இப்படிப்பட்ட வீரனான எனக்கு மலைகள் மற்றும் குகைகள் மீது தீராத (விபரீத) ஆசை எப்போதும் உண்டு.

                             ஜாவா தீவின் இயற்கை ரகசியங்களில் ஒன்று ஜும்ப்லாங்(Jomblang) குகை. சமயம் கிடைத்தால் மலைகள் ஏறும்  வாய்ப்பை விட்டதே இல்லை நான். இந்தோனேசியா குகைகள் பற்றி வலைத்தளங்களில் தேடிய போது ஜும்ப்லாங் குகை கண்ணில் பட்டது ஆனால் படித்து அறிந்ததில் அது எளிதில் பயணம் செய்ய முடியாத நடைமுறைக்கு ஒவ்வாததாகத் தெரிந்தது.  மனதைத் தேற்றிக் கொண்டேன் . ஒரு வருடம் கழித்து 3நாள் திடீர் விடுமுறை கிடைத்தும், மத்திய ஜாவா தென் பகுதியின் பிரசித்தி பெற்ற  கடற்க்கரைகளுக்கு போகலாம் என் முடிவு செய்தோம். இரண்டாவது முறை செல்வதால் ஆர்வம் இன்றியே சென்றேன். இந்த முறை நால்வர் அணியாக சுற்றுலா சென்றோம் மூத்த நண்பர் திரு முத்துபாலா, முத்துக்குமார், சம்பந்தம் மற்றும் ஜீவா  என்ற லகுலேஷ்  நான். முதல் நாள் பயணத்திலேயே பாதி கழிந்தது . இரண்டு கடற்கரைகளை ரசித்து விட்டு விடுதியில் தங்கிய போது இரண்டாம் நாள் எங்கு போகலாம் என்று விவாதித்து விட்டு தூங்கினோம். சுற்றுலா சுவரொட்டியில் சில இடங்களை தேர்வு செய்து.. இங்கெல்லாம் சென்று விட்டு ஊர் திரும்பலாம் என் முடிவெடுத்தோம். அதில் ஒரு புகைப்படம் என்னை ஈர்த்தது... எங்கோ பார்த்த நினைவு..அட! ஜும்ப்லாங்!!!!
நால்வர் அணி: முத்துக்குமார், முத்துபாலா,  ஜீவா என்ற லகுலேஷ், சம்பந்தம்

மறுநாள் அடுத்த இரண்டு கடற்கரைகள் சென்று விட்டு (கடற்கரைகள் பற்றி தனியாக ஒரு கட்டுரை பதிவு செய்ய ஆசை) Cave tubing மற்றும் குவா ஜோம்ப்லாங் (Gua Jomblang) செல்ல முடிவு செய்தோம். பின் மதிய வேளையில் சரியாக உணவருந்தாமல் தேடினோம்.. தேடினோம்.. கொண்டே இருந்தோம்.. கடைசியில் வயது முதிர்ந்த ஒரு அம்மாவிடம் கேட்ட போது ஒரு கணம் விழித்து விட்டு "ஓஓ ஓ........ ஜு....ம்ப்லா.......ங்" என்று ராகமாய் இழுத்து வழி சொன்னார்(அது ஜோம்ப்லாங் இல்லை ஜும்ப்லாங் மக்கா....!!!!)

நாங்கள் சென்றது ஒரு ஊராட்சிப் பகுதி சாலை. சிறு நகரமோ, பெருநகரமோ, குக்கிராமமோ, சாலைகள் கச்சிதமாகவே இருக்கும். இந்த குகைக்குக் செல்லும் வழி  நான்கு சக்கர வாகன வழித்தடமாக இருந்தது. அதாவது சக்கர வழிதடம் தவிர மற்றவை புற்கள். வெறும் 12 அடி சாலை. ஒரு வேளை எதிர்புறம் வேறு வண்டி வந்தால் பின்வழியே மீண்டும் போக வேண்டியது தான். 1 கிமீ ..3கிமீ....சென்றதும் மிச்சமிருக்கும் குக்கிராமங்களும் கடந்து நடுக் காட்டில் எந்தப்பக்கம் போவதென்றே தெரியவில்லை. சம்பந்தம் "ஆனது ஆகிடுச்சு ..இன்னும் கொஞ்ச தூரம் போய் பாக்கலாம் " என்று 2கிமீ சென்றதும் சிறிய பலகை., மனித நடமாட்டத்தின் அறிகுறி தெரிந்தது. காடு மேடல்லாம் திரிந்து ஒரு வழியாகப் போய் சேர்ந்தால் எங்கள் வண்டி மட்டுமே நான்கு சக்கர வாகனம். சுற்றும் முற்றும் யாருமே இல்லை 5 இரு சக்கர வாகனங்கள், பலகைத் தவிர. ஒற்றையடிப் பாதையில் சில அடி தூரம் நடந்ததும் ஒரு உழவரைக் கண்டு விசாரித்தோம். அவர் சொன்ன வழியில் 200அடிகள் தூரம் சென்று பார்த்ததும் லேசாகக் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது...!!!!!
குகையின் ஒரு புறம்

எங்கள் ஊர் கடமன்குளத்தின் அருகில் தரையோடுத் தரையாக இருக்கும் கிணறுகள், பெரியவை.  என் நண்பன் பாஸ்கரன்  வயலுக்குக் செல்லும் வழியிலிருக்கும் கிணறு அதைவிடப் பெரியது. இந்த குகை இருபது கிணற்றுகள் அளவு கொண்ட சுற்றிலும் மரங்களும்,தாவரங்களும் சூழ்ந்த செங்குத்தான குகை! முத்துபாலா அண்ணன் "ஐயோ நான் வரல இந்த விளையாட்டுக்கு"என்கிறார்....முத்துகுமார் " அண்ணா நீங்க எல்லாரும் முதல்ல பக்கத்துல போகாதீங்க.. இங்க இருந்து பாக்றது போதும்"என்றார். நானும் சம்பந்தமும் 5அடிகள் அருகே இருந்தோம்..கால்கள் வெலவெலத்துப் போய். சம்பந்தம்...." எனக்கு அல்லே இல்ல...ஆள விடுங்க" என்றார். அவ்வளவு பெரிய குழியை பார்த்ததும், உள்ளே இறங்க நினைத்ததால் பிதற்ற ஆரம்பித்தோம் என்பதே உண்மை. ஒரு 20நிமிடம் இங்கும் அங்கு நடந்து விட்டு கிளம்பலாமென முடிவெடுத்தோம்.சிறிது நேரம் பேசிக்கொண்டு இருக்கும் பொது குகைக்குள்ளே இருந்து ஜீவா என்று கேட்டதும் ஒரு கணம் அரண்டு போனேன். சம்பந்தத்திடம் சொன்னால் உள்ளே இருந்து குரல் வர வாய்ப்பில்லை என்றார் மீண்டும் கேட்டதும் தான் அது ஒரு பெண் குரல் உள்ளிருந்து தான் வருகிறது என்று தெரிந்ததும் வியந்து போனோம்.  (Jeeva @ Jiwa ஜாவா மொழி..ஆனால் அர்த்தம் ஒன்று தான்)  வெளியே வரும்போது அந்த உழவர், குகையின் இன்னொரு வாசல் 900 அடி தூரத்தில் இருக்கிறது பாரக்கலாம் என்று சொன்னார். மீண்டும் வருவதற்கு தைரியமும் வாய்ப்பும் இல்லை என்பதால் பார்ததுவிட்டு போகலாமென சென்றோம். சாதாரண கிணறு போல காட்சி அளித்த அது..எட்டிப் பார்க்கும் அளவு பெரிதில்லை, மனமுமில்லை. ஆனால் சிறிது நேர நடை எங்களுக்குள் வேறொன்றை விதைத்தது....!
குகையின் மறுமுனை

என்ன ஆனாலும் சரி.. குகையில் இறங்கிப் பார்த்து விட்டுத் தான் ஊருக்கு போவது


முத்துக்குமாருக்கு வந்ததே கோபம்!! அப்படி இப்படியென்று சமரசமாகி அன்று இரவு மீண்டும் விடுதி எடுத்து தங்கினோம். இரவா அது?  மறுநாள் செல்ல  வேண்டிய குகைக்கு இரவே கனவில் செல்ல ஆரம்பித்தேன். பயம், கொடுங்கனவுகள் தூக்கத்தைக் கெடுத்தது. ஒரு வழியாகத் தூங்கி அதிகாலை 6 மணிக்கு எழுந்து கடமைகளை முடித்து கிளம்பினோம். 10 மணி நிகழ்வுக்கு 9 மணிக்கே தயாராகி இருந்தோம். மொத்தம் 26 பேர் கொண்ட குழுவில் 12பேர் பெண்கள், இரண்டு பேர் இங்கிலாந்திலிருந்தும், ஒரு பெண் வேறொரு ஐரோப்பிய நாட்டிலிருந்தும்.
நாங்களும் நாளைக்கு இறங்குவோம்ல!
 
 
விவாதம் ( இந்த விளையாட்டுக்கு நான் வரல.... சரியா?)

ஒவ்வொருவராக பெல்ட், கயிறு, காலனி அணிந்து வரிசையில் நிற்க ஆரம்பித்தோம். அத்தனை பெரும் யார் முதலில்  என்று..ஒருவர் பின்னால் இன்னொருவர் பின் வரிசை கட்டிக் கொண்டிருக்க முதலில் இறங்கியது முத்துபாலா.!!ஏறக்குறைய 180அடிகள் கயிறு கட்டி இறக்கப்பட்டோம் ஒருவர் அல்லது இருவர் இருவராக. உள்ளே இன்னொரு உலகம்.. மழைக்காடுகளின் வித்தியாசமான செடி கொடிகள் தாவரங்கள், பூச்சி வகைகள். குகையின் சுற்றளவு பெரிதாக இருந்ததால் வெளிச்சம் நன்றாகவே இருந்தது. ஆனால் அதற்கு நாங்கள் வரவில்லையே.. குகைக்குள் செல்வதே இலக்கு. அந்த நேரம் பார்த்து தேவையில்லாமல் நிலநடுக்கங்கள் நினைவிற்கு வந்து தொலைத்தது. குகையின் மறுமுனைக்கு செல்ல சில அடி தூரங்கள் மட்டுமே வெளிச்சம் கிடைக்கும். அதற்குப் பின் கும்மிருட்டு தான். டார்ச், ஹெட் லைட் போன்ற வசதிகளுடன் தான் சாத்தியம். வெறுங்கை வீசிக் கொண்டு போன எங்களுக்கு வழிகாட்டி தன்னுடைய டார்ச் கொடுத்து உதவினார். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்..பயமே..எப்போதுமே நீரில் நனைந்திருக்கும் சேறு சகதி வழி. 900 அடி தூரம் 20 நிமிட நடை. ஆங்காங்கே நான்கு கால் விலங்காக நடக்க வேண்டி இருந்தது.
 
 
ஆயத்தம்

 சிங்கம் 3
முதல்  வீரர்
அல்லே இல்ல !!!!
 
குகைக்குள்ளே!!

                                                                மறுமுனையை அடைந்ததும்... அளவில்லா சந்தோஷமடைந்தோம். முதல் நாள் எட்டி பார்க்க பயந்த நாங்கள் அதற்கு 200 அடிகள் நேர் கீழே இன்று..!! குகையின் ஓரங்களிலிருந்து நீர் சொரிவது மழை தூறல் போல் இருந்தது. சிறு வயதில் கிணற்று ஊற்றை பார்த்து அருகில் சென்று பருகலாம் என்ற எண்ணமிருந்தும் பயத்தினால்  முயற்சிக்கவில்லை.ஆனால் இன்று....அதே ஊற்று நீர் மழை போல என் மேல் பொழிகிறது. நாங்கள் நின்று கொண்டிருப்பதே ஒரு குகைக்குள் இருக்கும் ஒரு சிறிய முகட்டின் மேல். எங்களுக்கு கீழே ஒரு 150அடிகள் கீழே ஒரு சுனையும் ஓடிக் கொண்டிருகிறது. வேறு  இரண்டு குகைகள் இருக்கின்றன. ஆனால் அவைகளுக்குள் யாரும் சென்றதில்லை. ஜாவா தீவின் வயிற்றை பார்த்த உவகையில் மீண்டும் திரும்பி வந்து ஒவ்வொருவராக மேலே பயணிக்க தயாரானோம். இங்கிலாந்துப் பெண்களிடம் சில நிமிடங்கள் பேசி கொண்டிருந்ததில் அவர்கள் ஆசிய நாடுகள், இந்தோனேசியா முழுவதும் சுற்றிப் பார்க்க திட்டமிட்டிருந்தார்கள் எனத் தெரிந்தது. சுமார் 20 நிமிட அரட்டையின் முடிவில் ப்ரோமோ திட்டத்தை அவர்கள் கை விட்டு வேறு எங்கோ சென்றார்கள் என்றறிந்து அதைப் பற்றி விளக்கினேன். அப்போது தான் தெரிந்தது.. ஒரு பெண் ப்ரோமோ போயேத்  தீரவேண்டுமென சொன்னதும் மற்றொருத்தி வேண்டாமென கை விட்டதும். என்னடா இது இவர்களுக்குள் சண்டை மூட்டி விட்டுவிட்டோமோ என்று எண்ணத் தோன்றியது... அவர்கள் கேமராவை வாங்கி சில புகைப்படங்கள் எடுத்து கொடுத்து விட்டு நடையக் கட்டினேன்

சேற்று வழி....... கயிற்றின் உதவியுடன்
 
 
 
 
குகையின் கீழே சுனை

 
ஒளிக்கீற்று........... யுவதிகள்
 

 என் மகனுக்கு மிகப் பிடித்த பேர் க்ரில்ஸ் (Bear Grills) போஸ்




ஊற்று நீர்த் தூறல்



கடைசியாக வந்தவரும் அவரே

சொல்ல மறந்து விட்டேன்.............முத்துக்குமாருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால்(!!!!!!!!!!!!!!) அவர் குகை சாகசத்திற்கு வரவில்லை. விடுதியில் தங்கி விட்டார்.

சுபம்


 

5 comments:

  1. அருமையான நடை.. ஜீவா மேலும் எழுத வாழ்த்துகள்

    ReplyDelete
  2. இன்னொரு முறை சென்ற அனுபவம் கிடைத்தது. சிறந்த முயற்சி . மென்மேலும் தொடர உளமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஜீவா... எழுத்து நடை.. புகைப்படங்க.. அருமை.. அருமை.. அருமை!!!

    ReplyDelete
  4. ஜீவா அருமை சொலாடல் சிறப்பு

    ReplyDelete