பயணங்கள்: ப்ரோமோ (Mount Bromo)
பெயரை உச்சரித்ததும் பிரம்மன் நினைவிற்கு வந்தால் உண்மையும் அதுவே. ஜாவா மக்கள் தாங்கள் வணங்கிய பிரம்மனின் பெயரை எரிமலைக்கு இட்ட பெயர் தான் ப்ரோமோ. சுற்றிலும் மலைகள் , நடுவே இரண்டு மலைகளில் ஒன்று சீற்றமுடன் இருக்கும் சாம்பல் மலை. முதன்முறை இந்தோனேசியா தலைநகர் ஜகர்தா விமான நிலையத்தில் பெரிய புகைப்படம் பார்த்து வியந்து போனேன். சில வருடங்களுக்கு முன்பே ஊடகங்கள் வழியாக நிறைய தகவல்கள் தெரிந்திருந்ததால் மனதில் இந்தோனேசியா கனவு தேசமாகி போனது. வேலைக்கு வந்து கிட்டத்தட்ட ஓராண்டு கழித்து ப்ரோமோ செல்லும் வாய்ப்பு கிடைத்ததும் மனம் கொஞ்சம் அதிகமாக தான் சந்தோசப்பட்டது.
சுற்றலா செல்வதற்கு முதல் நாள், நண்பன் சரவணன் (நான் இந்தோனேசியா வர காரணமானவன்) ஏற்கனவே மனைவி மகன் சகிதம் சென்று வந்ததால் ஏகப்பட்ட அறிவுரைகள் சொல்லிக்கொண்டே இருந்தான். முன் ஜாக்கிரதை முத்தண்ணா போல் பேசுகிறானோ என்று எண்ணினாலும் ஸ்வெட்டெர், கையுறை எல்லாம் எடுத்து கொண்டேன்(26 வருட நண்பன் ...) செமரங்கில் இருந்து ப்ரோமோ சென்றடைய, சாலை வழி, குறைந்தது 10 மணி நேரம் ஆகும் என்று சொன்னதால் மாலை 4 மணிக்கே பயணத்தை தொடங்கலாம் என்று முடிவு செய்தாலும் அப்படி இப்படி என்று இரவு 8 மணிக்கு கிளம்பினோம். ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு சென்னை கிழக்கு கடற்கரை சாலை போல கடலுக்கு மிக அருகே செல்ல ஆரம்பித்தோம். 10 மணி நேரம் பயணித்து அதிகாலை 4.30 க்கு சென்றடைந்த போது இலகுவாக ஒரு குண்டை போட்டார்கள் மக்கள். இன்று இந்துக்களின் சிவன் கோவிலில் விசேடம் அதனால் அந்த வாயில் அடைத்து விட்டோம் என்று. ஏனெனில் நாங்கள் சென்றது மலாங் என்ற ஊரின் வழியாக. ஓட்டுனர் குறுக்கு வழியில் சீக்கிரம் போய் விடலாம் என்று எண்ணியதால் வந்த வினை. வேறு வழி இல்லாமல் மறுநாள் திட்டத்தை அன்று செயல்படுத்தினோம்.
மலையில் இருந்து வரும் வழியில் தூரத்தில் வானத்தில் மலை முகடு போல் தெரிந் மேகம் வானுயர்ந்த மலை போலவே இருந்தது . மலாங் சென்று விடுதியில் தங்கி குளித்து உணவருந்தி விட்டு உயிரியல் பூங்காவிற்கு கிளம்பினோம். செல்லும் வழியில் தான் அந்த பிரமிக்க தக்க காட்சி கண்டேன். அதிகாலையில் பனி மூட்டத்தில் உயரே முகடு போல் தெரிந்த மேகம் என்று சொன்னேன் அல்லவா? உண்மையில் நான் கண்டது இந்துக்கள், புத்தர்கள் எல்லோரும் வணங்கிய மாமேரு மலை தான் அது. இராஜபாளையம் நகர் அருகில் "பல் இளிச்சான் கணவாய் " மட்டுமே அழகான மலை என்று எண்ணி வளர்ந்த நான் வாயடைத்து மெய் மறந்து பார்த்து கொண்டே இருந்தேன். ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நம் முன்னோர்கள் எப்படி இதை கண்டு பிடித்தனர்? ஓங்கி உயர்ந்த மலையை பார்த்து கொண்டே வரும்போது தான் தெரிந்தது...நாங்கள் செல்வதே சுமேரு மலையின் அடிவாரத்திற்கு தான் என்று. அங்கு தான் உயிரியல் பூங்கா அமைந்துள்ளது . உயிரியல் பூங்காவில் வெவ்வேறு விலங்கினங்களை பார்த்து விட்டு, அருகில் மற்றொரு மலை நகரம் சென்று பொழுது கழித்தோம். நள்ளிரவு மீண்டும் ப்ரொபொலிங்கொ புறப்பட்டோம். 3 மணி நேர பயணம், சுமார் 2 மணிக்கு சுகபுரா என்ற ஊரில் விடுதி எடுத்தோம். உள்ளூர் சுற்றுலா ஜீப் வழிகாட்டி சரியாக 3 மணிக்கு கிளம்பினால் தான் மலை முகட்டிற்கு சென்று சூரிய உதயம் பார்க்க முடியும் என்று சொன்னதும் ஏற்கனவே இரு இரவுகள் தூங்காத கண்கள் கலங்கவே ஆரம்பித்து விட்டது.
நண்பர் ஜெய் அரோரா சரியாக 50 நிமிடங்களில் எழுப்பினான். வெறும் 50 நிமிட தூக்கம்..காலை கடன் முடித்து முகம் கழுவி பல் தேய்த்து கிளம்ப 3.30 ஆகி விட்டது. உள்ளூர் வழிகாட்டியுடன் ஜீப்பில் செல்லும் போதே மீண்டும் தூக்கம். வெறும் 15 நிமிடங்களில் ஆவேசமாக என்னை யாரோ அடிப்பது போல் தெரிந்து சற்றே கோபத்துடன் கண் விழித்து ஜெய் யை சுட்டுவிடுவது போல் பார்த்தேன். ஆனால் அவன் கண்களில் மிரட்சி, பயம் தெரிந்தது. என்னாயிற்று? என்றதற்கு முன்னால் கை காட்டி எனக்கு பயமாக இருக்கிறது நீங்கள் இருவரும் எப்படி தூங்கி கொண்டே இருகிறீர்கள் என்றதும் திரும்பி பார்த்தேன்....உயிர் பயம் இன்னொரு முறை என் வாழ்வில் வந்தது....... ஓட்டுனர் அருகில் முன்னிருக்கையில் தான் அமர்ந்திருந்தேன். எங்கள் முன்னால் 3 அடிக்கு அப்பால் ஒன்றுமே தெரியவில்லை.இருட்டில் மலையில் இருக்கிறோமா? பள்ளத்தாக்கில் இருக்கிறோமா? என்று கூட தெரியவில்லை. திரு வாஜ்பாய் அவர்கள் எழுதிய கவிதை " சுற்றிலும் பனி மூட்டம், என்னை நானே தேட வேண்டிய நிலை".. எங்கள் நிலையும் அது தான் . நாங்கள் மலை ஏறி கொண்டு இருகின்றோம் ஆனால் வழி எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை. வழிகாட்டி ஓட்டுனர் கிட்டத்தட்ட 50கிமீ வேகத்தில் கண்ணாடி அருகில் உற்று பார்த்தவாறே செல்கிறார். . நண்பர் முத்துவும் பின்னிருக்கையில் தான் இருந்தார். அவரவர் இருக்கைகளில் இறுக்கி பிடித்து கொண்டு உட்கார்ந்து கொண்டோம். எனக்கு பனி மூட்டத்தில் பயணிப்பது இது முதல் முறை இல்லை என்றாலும் ஊர்தியில் முதன் முறை. சற்று நேரத்தில் ஓரிடத்தில் நிறுத்தி விட்டு 5 நிமிடங்கள் கழித்து மீண்டும் தொடங்கினோம்...அப்போது இன்னொரு மலை வழி ஆரம்பித்தது. மிக குறுகிய சாலை ஆனால் பாதி செங்குத்தாய் பயணம். அடுத்த 30 நிமிடங்களில் மலை முகட்டில் இருந்தோம். கையுறை, டெனிம் கால்சட்டை எல்லாம் கடந்து குளிர் உடலை துளைத்தது...வெப்பநிலை 2இல் இருந்து 5 செல்சியஸ் இரவுகளில் சாதாரணம்.
ஜீப்பிலிருந்து இறங்கி 500 மீ நடந்து விளிம்பிற்கு செல்லும் போதே கருக்கல் முடிந்து விடிய துவங்கியது. ஊடஹங்களில் கண்டவைகளை நேரில்காணப்போகிறோம் என்ற மகிழ்ச்சி... சில ஆயிரம் கண்களோடு எனதும். நிமிடங்களில் கண்ணெதிரே தெரிந்த இயற்கை விந்தை !!!! எப்போதும் நான் அண்ணாந்து பார்க்கும் மேகக்கூட்டம் இன்று என் காலுக்கு கீழே, நான் நிலத்தில் இருக்கும் போது!! நாங்கள் நின்று கொண்டிருக்கும் மலை தான் ப்ரோமோ எரிமலையின் அரண்! கிட்டத்தட்ட வட்ட வடிவில் மலை தொடர்கள் நடுவில் இரண்டு மலைகள்..அமரர் சாண்டில்யனின் புதினங்களில் வரும் அரண் போல.. நிஜத்தில் ப்ரோமோ மலை தொடர் வெளி உலகிற்கு ஒட்டாத பிரதேசம். உதாரணத்திற்கு நம் ராஜபாளையம் நகருக்கு நடுவில் சஞ்சீவி மலை இருக்கிறது என்று கொள்வோம். ஊரை சுற்றி எல்லையாக வட்ட வடிவில் இன்னொரு மலை தொடர் வெளி உலகிற்கு தொடர்பில்லாமல்அரணாக இருப்பது போல். இரவில் அரணாக இருக்கும் மலை தொடரும் நடுவிலிருக்கும் இரு மலைகளை தவிர உள்ளே இருக்கும் சமவெளி முற்றிலுமாக பணியால் மூடப்பட்டிருக்கும். மேகங்களை கிழித்து கொண்டு கதிரவன் மெல்ல இளஞ்சிவப்பு, மஞ்சள் என நிறங்கள் மாறி வெளி வரும் போது அனைவரின் கண்களும் மேலும் விரிந்தது ...ஆம்! ஒற்றை ஒளிக்கீற்று மலை தொடர்களில் படர படர சாம்பல், நீலம் , பச்சை,பழுப்பு என வெவ்வேறு வண்ணங்களாக காட்சியளிக்கிறது!!இரு மலைகளில் பச்சை பசேலென்று ஒன்று, மற்றொன்று வெண்புகை உமிழ்ந்து கொண்டிருக்கும் எரிமலை. மேலும் அரைமணி நேரம் ரசித்துவிட்டு திரும்பினோம். கீழே இறங்கி செல்ல செல்ல அடுத்த ஆச்சரியம் காத்திருந்தது. முன் காலையில் நாங்கள் பனி இருளில் சற்று பயந்து கொண்டே வந்த வழி சாட்சாத் உள்ளே இருக்கும் அதே சமவெளி பிரதேசம்!! இப்போது மனம் சொல்லொனா மகிழ்ச்சியில் திளைத்தது...அதே பனி மூட்டம்.
அடுத்த ஆச்சர்யம் .....நாங்கள் போக வேண்டிய இடம் நடுவிலிருக்கும் மலைகளுக்கு என்பது தான். பச்சை நிற மலையில் சிறப்பு எதுவும் இல்லை. எனவே அருகில் இருக்கும் எரிமலை தான் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும். நூற்றுகணக்கான குதிரைகள் வாடகை சவாரிக்கு தயாராக இருந்தாலும் நடந்து செல்லவே எனக்கு பிடித்தது. வெறும் நான்கு கிலோமீட்டர் என்றாலும் பனி மூட்டம், தளர்வான மண், ஏற்றமான வழி முக்கியமாக காற்றில் எரிமலை சாம்பல் மழை இவைகள் சீக்கிரம் சோர்ந்து போக செய்துவிடும்.
இந்தோனேசிய இந்துக்கள் கட்டிய சிவாலயம் ஒன்று மிகுந்த அதிசயம் கொண்டது எரிமலைக்கு செல்லும் வழியில் அடிவாரத்தில் உள்ளது. அதிசயம் இது தான்.... .எரிமலைக்கு நேர் கீழே அமைந்துள்ள அந்த கோவிலில் ஒரு சாம்பல் தூசியோ அல்லது மணலோ இல்லை..கோவில் கருங்கல்லால் திறந்த வெளி கட்டிட கலையால் நிர்மாணிக்க பட்டுள்ளது.
சரியாக ஒரு நேரம் நடந்து எரிமலை அருகே சென்ற பொது வெகுவாக களைத்து விட்டோம் . அங்கிருந்து உச்சிக்கு செல்ல வெள்ளியங்கிரி மலையின் முதல் மலை போல் படிக்கட்டுகள் கட்டியிருக்கிறார்கள். ஆனால் இங்கிருப்பது சிமெண்ட் படிக்கட்டுகள்.
சுமார் நூறு படிகள் கடந்து எரிமலை வாயில் நின்று எட்டி பார்த்தால் மனதில் பயம் கலந்த மகிழ்ச்சி படர்ந்தது. சற்றேறக்குறைய 1.5 கிமீ விட்டம் சுற்றளவு கொண்ட எரிமலை அமைதிக்கு உவமையாக சொல்லப்படும் "வெள்ளை நிற" புகையை உமிழ்ந்து கொண்டே இருக்கிறது. அழகிற்கும் ஆபத்திற்கும் மிக நெருங்கிய இயற்க்கை தொடர்பு இயற்கை நியதி என்பதை மீண்டும் ஒரு முறை உணர்ந்தேன்.
எரிமலையிலிருந்து கீழே இறங்கி வந்து சமவெளி பகுதியை பார்க்க போனோம். நிலத்தில் உள்ள தீவு பிரதேசத்தில் எட்டு திசைகளிலும் வேற்று கிரக உலகம் போல் வெவ்வேறு நிறங்களும், சாம்பல் திடல், மதில் சுவர் போன்ற செங்குத்து தொடர், பச்சை பசேலென்ற புற்கள் என்று மலைக்க வைத்தது இயற்கை.
360° Panoramic View of Bromo
சிறு வயதிலிருந்து இயற்கையும், ஐவகை நிலங்களும் எனக்கு பிடிக்கும். என் பெற்றோர் வழி வந்த மரபணு... இயற்கை அழகை கண்டதும் உணர்ச்சி குவியலாய் மாறிடுவேன் அன்றி காளமேக புலவனாய் கவிதை இயற்ற தெரியாது. ப்ரோமோ மலை பிரதேசத்தில் என் மன ஓட்டங்கள் இன்னும் அதிகமான மனக்கிலேசத்தை தந்தது என்பது மட்டும் நிச்சயமான உண்மை. மீண்டும் இந்த இயற்கை அன்னைக்கும் என் பெற்றோருக்கும் நன்றி!!!!! வேறதுவும் சொல்லி விவரிக்க தெரியவில்லை.